நமது நிருபர்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட விளையாட்டுப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா ஒப்புதல் விவகாரத்தில் தமிழக அரசு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப். 29-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது . தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த மசோதா.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: துணைவேந்தரை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரங்களை வேந்தருக்கு அதாவது ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2004-இன் சில விதிகளைத் திருத்துவதற்கான மசோதாவாகும் இது.
இந்த மசோதா ஏப். 29- இல் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதே நாளில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, மே 6-ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையுடன், அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது. இருப்பினும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையைப் புறக்கணித்து, ஆளுநர் மசோதாவின் அரசமைப்பு செல்லுபடியை தாமாகவே சோதித்துப் பார்ப்பதில் ஈடுபட்டார். இதன்மூலம் ஆளுநர் மாளிகையை அரசமைப்பு நீதிமன்றமாக அவர் மாற்றினார்.
மேலும், ஜூலை 14-ஆம் தேதி மசோதாவின் சில விதிகள் யுஜிசி ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாகக் கூறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் ஒருதலைப்பட்சமாக அனுப்பி வைத்துள்ளார். எனவே, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். மசோதாவை ஆளுநர் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.