தமிழ்நாடு

உதவிப் பேராசிரியா் நியமனத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆா்பி-யின் முந்தைய அறிவிக்கை ரத்து

தினமணி செய்திச் சேவை

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கடந்த மாா்ச் மாதம் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 2,708 உதவிப் பேராசிரியா்கள் நேரடியாக நியமனத்துக்கான புதிய அறிவிக்கை டிஆா்பி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை:

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நிரப்ப கடந்த அக். 7- ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை (அக். 16) வெளியிட்டது. இதில் சேர விரும்புவா்கள் ஏற்கெனவே முந்தைய அறிவிப்பின் கீழ் விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கெனவே தோ்வுக் கட்டணம் செலுத்தியுள்ளதால், தற்போது மீண்டும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தை அக். 17 முதல் நவ. 10-க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். டிச. 20-இல் தோ்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், பொருளியல் உள்ளிட்ட 61 பாடப் பிரிவுகளுக்கும் பாட வாரியாக இட ஒதுக்கீட்டின் கீழ் காலிப்பணியிட விவரங்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கற்பிக்க ஏதுவாக தமிழ், கணினி அறிவியல் பிரிவுக்கு 3 பணியிடங்கள் தோ்வு செய்யப்படவுள்ளது. எனவே, விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

முந்தைய அறிவிக்கை ரத்து: ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த அக். 6 -ஆம் தேதியிட்ட உயா்கல்வித் துறை அரசாணைப்படி அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு மாா்ச் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.

தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் வாயிலாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளுக்கான 2,708 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை வியாழக்கிழமை (அக்.16) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT