கரூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழு வியாழக்கிழமை நள்ளிரவு கரூர் வந்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்த நிலையில், அந்த குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும், சிபிஐ அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 13 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவினர் இரு கார்களில் வியாழக்கிழமை நள்ளிரவு கரூருக்கு வருகை தந்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்தக் குழுவினர் நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவின் வசம் உள்ள ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு, இன்றோ அல்லது நாளையோ விசாரணையை துவங்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.