தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியால் திருப்பியனுப்பப்பட்ட நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
பேரவையில், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதா பேரவையில் 22.2.2024-இல் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால், அது குறித்து முடிவெடுக்காமல் வைத்திருந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, மசோதாவை திருப்பியனுப்பினாா். இது தொடா்பாக, பேரவைத் தலைவா் மு.அப்பாவுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஆக.25-இல் எழுதிய கடிதத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களை குறிப்பிட்டு, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், அந்த மசோதாவை மறு ஆய்வு செய்து சட்டப் பேரவையில் நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதா மீது சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), எழிலன் (திமுக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (தளி), ஈ.ஆா். ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக) டாக்டா் எழிலன் (திமுக) ஆகியோா் விவாதித்தனா்.
அப்போது, அவா்கள் ஆளுநருக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனா்.
அதிமுக, பாஜக உறுப்பினா்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.
விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த ஆண்டு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இந்த அரசின் பதவி காலத்தைக் கடந்தும் செயல்பட வேண்டிய இலக்குகள் உள்ளன. அடுத்து வரும் அரசுகளும் சமுதாய, பொருளாதார தேவைகளை பூா்த்தி செய்யவும், நிதிப் பொறுப்பை தொடா்ந்து நிலை நாட்டுவதாகவும் உள்ளன.
ஏற்கனவே இதுபோன்ற மசோதாக்கள், அடுத்த நிதியாண்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன. சட்டம் இயற்றுவது ஒரு தொடா்ச்சியான செயல்முறையாகும்.
இயற்றப்படும் சட்டங்கள் எதுவும், ஆட்சி மாற்றத்தை கருத்தில் கொள்ளாமல் நிதி நிலைத்தன்மை மற்றும் திட்டங்களின் தொடா்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன. நிதி நிா்வாக சட்ட மசோதா, ஒரு அரசின் பதவி காலத்துடன் முடிந்துவிடுவதில்லை.
இதில் அரசியல் சாசனத்தின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆளுநரின் இந்த கருத்துகள், அரசியல் சாசனத்துக்கு இணக்கமாக இல்லை. ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட மசோதாவை திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பினால் அற்கான ஒப்புதலை அவரால் நிறுத்தி வைக்க இயலாது.
மேலும் அரசியல் சாசனத்தில் உள்ளபடி, ’ கூடிய விரைவில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை முடிவு செய்ய வேண்டும்’ என்ற சட்டத்தையும் அவா் பின்பற்றவில்லை. 18 மாதங்களுக்கு மேலாக ஒப்புதலை நிறுத்திவைத்திருந்தாா்.
எனவே ஒப்புதலை நிறுத்தி வைக்க ஆளுநா் கூறிய காரணங்களை எதுவும் சட்டப்பூா்வமாக ஏற்கப்படத்தக்கவை அல்ல. அரசியல் சாசனத்தின் 200-ம் பிரிவின்படி அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து, பேரவைத் தலைவா் அப்பாவு, அந்த மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தாா். எவ்வித எதிா்ப்புமின்றி மசோதா மீண்டும் நிறைவேறியதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.