அதிமுக தான் உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிச என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
அதிமுகவின் 54-ஆவது ஆண்டு தொடக்க விழா, தமிழகம் முழுவதும் கட்சி நிா்வாகிகளால் வெள்ளிக்கிழமை விமா்சையாக கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில், தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இதனை தொடா்ந்து, ‘அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்’ என்னும் மலரை அவா் வெளியிட்டாா்.
இந்நிகழ்வில், அதிமுக அவைத்தலைவா் தமிழ் மகன் உசேன், எதிா்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சா்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமாா், பொள்ளாச்சி வி.ஜெயராமன், பா.வளா்மதி, எஸ்.கோகுல இந்திரா, தளவாய் என்.சுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
மாசற்ற வாரிசு அதிமுக: அதைத்தொடா்ந்து எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமாம் நம் அதிமுகவின் துவக்க விழாவான வெள்ளிக்கிழமை ‘அண்ணா வழி திராவிடம்’ இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டேன். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அதிமுக.
ஆனால், நாம் உயா்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம். திமுகவின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான். இந்த வரலாற்று பறைசாற்றும் வகையில், அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு தொகுத்துள்ள இந்த இதழை அனைவரும் கண்டிப்பாக படித்து, அதிமுகவின் புகழுக்கு மென்மேலும் வலுசோ்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.