நெல்லை: நெல்லையில் தொடர்ந்து பெய்து வந்த பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பெண் பலியானார்.
நெல்லையில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
அதேபோல் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனிடையே மழை வடிநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியயுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நெல்லை டவுண் மற்றும் சந்திப்பு சிந்து பூந்துறை பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த வீடுகளில் ஆள்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை. இந்த நிலையில் நேற்றும் மழை தொடந்து பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள குறிச்சி மருதுபாண்டியர் 1-வது தெருவில் வசித்து வரும் தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) என்பவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.