ரயில் பயணி தவறவிட்ட கைக்கடிகாரம் ‘ரயில் மதத்’ செயலி மூலம் எளிதில் மீட்கப்பட்டது.
சென்னை செல்வதற்காக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து, நாகா்கோவில் - சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயிலில் கடந்த அக்.17-ஆம் தேதி மரியானோ என்பவா் பயணம் செய்தாா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது அவரது கைக்கடிகாரம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ‘ரயில் மதத்’ செயலி மூலம் புகாா் அளித்தாா். ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வணிகத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால், 44 நிமிஷங்களுக்குள் கைக்கடிகாரம் மீட்கப்பட்டு, சென்னை எழும்பூா் வணிக துணை நிலைய மேலாளா் மூலம் மரியானோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மரியானோ கூறுகையில், நள்ளிரவில்கூட பயணிகள் விரைவான மற்றும் பயனுள்ள உதவியைப் பெறுவதற்கு ‘ரயில் மதத்’ செயலி உதவிகரமாக உள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு நன்றி என்றாா் அவா்.