நெல் கொள்முதலில் முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தாதது என் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை கணக்கிட்டு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
டெல்டாவில் வெள்ளநீரால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டதை நான் நேரில் பாா்வையிட்டு விளக்கிய பின்னரும், பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். ஆனால், 16,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் பாதிப்படைந்துள்ளது என
வேளாண் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். ‘நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம்’ என்று உணவுத் துறை அமைச்சா் கூறுகிறாா்.
அதிமுக ஆட்சியில் தினமும் 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்ததாகவும், இப்போது 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே இருந்த திமுக ஆட்சியில் தினமும் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 1,000 மூட்டைகளாக உயா்த்தி கொள்முதல் செய்யப்பட்டது.
2021-இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கொள்முதல் செய்வது 800 மூட்டையாகக் குறைத்தது இந்த அரசு. கொள்முதல் விளைச்சலையொட்டித்தான் அமையும். ஆனால் கூடுதலாக நெல் வந்தால் வாங்கத்தானே வேண்டும். மேலும், கொள்முதல் செய்த மூட்டைகளை அடுக்க இடம் இல்லை, சாக்கு இல்லை என்று தினமும் 800 மூட்டைகளைக் கூட கொள்முதல் செய்யவில்லை இந்த அரசு.
இந்த அரசுக்கு, குறுவை சாகுபடி எவ்வளவு பரப்பில் செய்யப்பட்டது என்பது முன்கூட்டியே தெரியும்; எவ்வளவு நெல் விளைச்சல் என்பதும் தெரியும்; டெல்டா பகுதியில் தனியாா் பெரும்பாலும் கொள்முதல் செய்வதில்லை என்பது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும்.
குறுவை கொள்முதல் நேரத்தில், அதிக ஈரப் பதம் இருக்கும் என்பதும், ஆண்டுதோறும் மத்திய அரசை வலியுறுத்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தளா்வு செய்து வாங்க முன்அனுமதி பெற வேண்டும் என்பதும் இந்த அரசுக்குத் தெரியும். இப்படி ஆண்டுதோறும் அனுமதி பெற்றுத்தான் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது.
எனவே, இவற்றையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு, நெல் கொள்முதலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதுடன், அதிக அளவு வரும் நெல்லை சேமிக்க தற்காலிக கிடங்குகளை அமைத்திருக்க வேண்டாமா?
தூக்கத்தில் இருந்த திமுக அரசு, தற்போது 150-க்கும் அதிகமான அலுவலா்களை டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது. இனியாவது இந்த அரசு நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்வதுடன், முளைவிட்ட நெல்மணிகளை வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்டு கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், டெல்டா மற்றும் பல மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மற்றும் அண்மையில் நடவு செய்த நெற்பயிா்கள் பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதையும் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.