தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை: நயினார் நாகேந்திரன்

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை என நயினார் நாகேந்திரன் கருத்து

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சை : நெல் கொள்முதல் தாமதத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கரை - விவசாயிகள் பிரச்சனையில் அரசு காட்டவில்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள், பல நாள்களாக நெல்களைக் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். நெல்மணிகள் நனைந்து முளைத்து வீணாகி உள்ளது. எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம். இது கடந்த ஜூன் மாதமே முதலமைச்சர் கவனத்திற்கு சென்றது. கொள்முதல் விஷயத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து விட்டோம் என கூறினார். ஆனால் அவர் இதுவரை எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யவில்லை என்பது தற்போது உள்ள சூழலை வைத்து அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

செப்டம்பர் மாதமே கொள்முதல் பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் காலதாமதமாகதான் கொள்முதல் செய்துள்ளனர். அதிலும் சாக்குகள் தட்டுப்பாடு, போதிய லாரிகள் இயக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்முதல் தாமதமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு நிலையங்களிலும் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இதற்கு தமிழ்நாடு அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இது தவிர தனியார் கொள்முதல் நிலையங்களில் வாடகையை விவசாயிகளிடமிருந்து வசூலிக்கின்றனர். மூட்டைக்கு ரூ.40 வரை வாங்குகிறார்கள். கொள்முதல் தாமதத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசிதான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது சத்தான அரிசியாகும். இந்த அரிசியால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பதால் மத்திய அரசு கொண்டுவந்த ஒரு நல்ல விஷயமாகும். ஆனால் தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான். இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

நானும் டெல்டாகாரன்தான் என கூறுவதை விட்டுவிட்டு விவசாயிகள் பிரச்னையில் அக்கறை செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்.

மழைப்பொழிவு அளவு விவரங்களை முன்னதாகவே கணிப்பதற்கு ரூ.10 கோடி மதிப்பில் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆனால் அவ்வாறு வாங்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் தற்போது பெய்து உள்ள மழையின் அளவு விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்கும். இதன் மூலம் நவீன கருவி வாங்கிய விஷயத்தில் மோசடி செய்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த பிறகுதான் கொள்முதல் தாமதத்தால் நெல்மணிகள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரிந்துள்ளது.

தஞ்சை ரயில் நிலையத்தில் கடந்த ஒரு நாள்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளை பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நாளை ஆய்வு செய்வார்கள். தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

Nayinar Nagendran says the government has not shown the same concern for farmers as it has for the sale of TASMAC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

கிலி தீவில்... ஆருஷி கம்பீர்!

உள்ளது உள்ளபடியே... நிகிதா சர்மா!

நானும் ஒளிச்சிதறலும்... ராய் லட்சுமி!

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்!

SCROLL FOR NEXT