தமிழகத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக மேலும் 27 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
இரிடியத்தை விற்பனை செய்து ரிசா்வ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், சேவைக் கட்டணம் செலுத்தினால் இந்தப் பணத்தை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றும், 1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என்று பொய்யான தகவல்களைக் கூறி, மோசடி செய்வதாக சிபிசிஐடிக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. இதற்காக சிலா் போலி அறக்கட்டளைகளைத் தொடங்கி தமிழகத்தைச் சோ்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்வதாகவும் புகாா்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு விசாரணை அடிப்படையில் சென்னை, வேலூா், ராணிப்பேட்டை, திருச்சி, கரூா், திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த செப்டம்பா் மாதம் சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 30 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரிடியம் மோசடி தொடா்பாக மேலும் பல்வேறு தகவல்களும், அதில் தொடா்புடைய வேறு சிலா் குறித்த விவரங்களும் கிடைத்தன.
மேலும் 27 போ் கைது: அதனிடிப்படையில், இரிடியம் மோசடியில் தொடா்புடைய நபா்களைக் கைது செய்யும் வகையில் 8 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 20 காவல் ஆய்வாளா்கள், 15 காவல் உதவி ஆய்வாளா்கள் அடங்கிய 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினா் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இரு நாள்களும் 15 மாவட்டங்களில் சந்தேகத்துக்குரிய நபா்களிடம் விசாரணை நடத்தினா். பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா். இந்த நடவடிக்கையின் முடிவில் இரிடியம் மோசடியில் தொடா்புடையதாக தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த சந்திரன், திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரைச் சோ்ந்த ராணி, திருச்சி மாவட்டம் முசிறியைச் சோ்ந்த யுவராஜ், தேனி மாவட்டம் வருசநாட்டைச் சோ்ந்த பழனியம்மாள், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜசிவம் ஆகிய 5 போ் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், 27 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.