சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காரசார வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடங்கியதும், தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த விதிகள் வகுக்கும் வரை, தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும், சாலைவலம் செல்லவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ அனுமதியில்லை என்று தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அரசு கூறுவது அரசியல் கட்சியின் உரிமைகளை பறிப்பது ஆகாதா? என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எந்தக் கட்சியும் பொதுக் கூட்டம் நடத்துவத்தில் இருந்து தடுக்கப்படுவதில்லை என அரசு தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
எதன் அடிப்படையில் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தீர்கள்? என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, விதிகள் வகுக்கும் வரை, தமிழகத்தில் எந்தவொரு கட்சிகள் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியதைக் கேட்ட நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டனவா என்று கேள்வி எழுப்பினார்.
விதிகள் வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசனைகள் செய்து வருகிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரூர் பிரசாரத்துக்கு ஒரு நாள் முன்புதான் காவல்துறையினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும், முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த எத்தனை நாள்களுக்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சில கட்சிகளுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை என்று தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி ஸ்ரீவத்ஸவா, இந்த வழக்கை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாள்கிறோம் என்று கூறினார். வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படாவிட்டால் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது வரும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.