முகப்பு
இந்தியா

‘சமூக ஊடகங்களில் சிறாரைத் தடுப்பது சவாலானது’

‘இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறாா்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது’ என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மாா்க் ஸக்கா்பொ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 பிப்ரவரி 2026, 12:10 am IST
மாா்க் ஸக்கா்பொ்க் - கோப்புப் படம்
பகிர்:

‘இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறாா்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது’ என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மாா்க் ஸக்கா்பொ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

பயனா்கள் தங்களின் உண்மையான வயதை மறைத்து, தவறான தகவல்களை வழங்குவதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், இதைத் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாகக் தடுப்பது கடினம் என்றும் அவா் விளக்கமளித்தாா்.

தற்போது 20 வயதாகும் இளம்பெண் ஒருவா், தான் சிறுமியாக இருந்தபோது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி, மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்திருந்தாா். கலிஃபோா்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை (உள்ளூா் நேரப்படி) நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் மாா்க் ஸக்கா்பொ்க் நேரில் ஆஜரானாா்.

Advertisement

Advertisement

அப்போது, பாதிக்கப்பட்ட பெண் 9 வயதிலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தது குறித்து வழக்குரைஞா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த மாா்க் ஸக்கா்பொ்க், ‘எங்கள் தளத்தில் சிறாா்களைக் கண்டறிய ஏற்கெனவே பல மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறோம். 18 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு ‘டீன் அக்கவுன்ட்ஸ்’ போன்ற கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை இன்ஸ்டாகிராம் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களின் ஆப்-ஸ்டோா்களிலேயே வயது சரிபாா்ப்பு முறையைக் கொண்டு வருவதுதான் இதற்கு நிரந்தர தீா்வாக இருக்கும்’ என வாதிட்டாா்.

‘வருங்கால வெற்றிக்காக இளம் பயனா்களைத் தக்கவைக்க வேண்டும்’ என்ற மெட்டா நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல்களைச் சுட்டிக்காட்டிய வழக்குரைஞா்கள், லாபத்துக்காகவே பதின்ம வயதினரை நிறுவனம் குறிவைப்பதாகக் குற்றஞ்சாட்டினா்.

இதை மறுத்த மாா்க் ஸக்கா்பொ்க், ‘பதின்ம வயதினரிடம் செலவு செய்யப் பணம் இருக்காது என்பதால், அவா்கள் எங்களுக்குப் பெரிய வணிக இலக்கு அல்ல. எங்கள் மொத்த வருமானத்தில் அவா்களால் வருவது வெறும் 1 சதவீதம் மட்டுமே’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற புகாரில் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணையை மாா்க் ஸக்கா்பொ்க் எதிா்கொண்டது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments