திருக்குறள் தம்பதி!
சமூக ஊடகங்களில் திருக்குறளின் பெருமைகளை இணையவாசிகளிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் கடலுரைச் சேர்ந்த பகலவன்-பரமேஸ்வரி தம்பதியினர்.
சமூக ஊடகங்களில் திருக்குறளின் பெருமைகளை இணையவாசிகளிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் கடலுரைச் சேர்ந்த பகலவன்-பரமேஸ்வரி தம்பதியினர்.
காய்கறிகளை நறுக்கியபடி, பாத்திரங்களைக் கழுவியபடி, வீட்டு வேலைகளைச் செய்தபடி பரமேஸ்வரி என்கிற சரண்யா, திருக்குறளைச் சொல்லும் விதம் இணையவாசிகளைக் கவர்ந்திருக்கிறது. 1330 குறள்பாக்களையும் பகவலன் அறிந்திருந்தாலும், அவர் தனது மனைவியையே முன்னிலைப்படுத்துகிறார்.
'சரண்யா, உணவு உண்ணும் முறை குறித்து திருவள்ளுவர் சொல்லி இருக்கிறாரா?, குடிநீர் வரும் குறள் எது?, காய், கனி வரும் குறள் எது?, மாமிசம் குறித்ததான குறள் எது?, திருக்குறளில் வரும் போக்குவரத்துச் சாதனங்கள் என்னென்ன?, வள்ளிக்கிழங்கு பற்றிய குறள் எது?' என்று பல்வேறு கேள்விகளை பகலவன் கேட்க கேட்க, அவற்றுக்கான குறள்களைச் சொல்லி, வியக்கவைக்கிறார் பரமேஸ்வரி.
Advertisement
Advertisement
'திருக்குறள் மீது இப்படியொரு ஆர்வம் வரக் காரணம் என்ன?' என்று பரமேஸ்வரியிடம் கேட்டபோது:
'என் சொந்த ஊர் கடலூர். பி.எஸ்ஸி. வேதியியல் படித்திருக்கிறேன். என் கணவர் பகலவன், சிதம்பரம் அருகேயுள்ள வக்கிரமாரியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுகிறார். நான்கு வயதில் பவ்யா என்ற மகள் உள்ளார். அரசுத் தேர்வுகளுக்காகத் தயாராகிய நிலையில், திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு வந்தது.
டாப் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் ஆகாஷமூர்த்தியின் திருக்குறள் வகுப்பில் பங்கேற்றவுடன் கூடுதல் ஆர்வம் வந்தது. அவர் திருக்குறள் வகுப்புகளை எடுக்கும்போது ஏதாவது ஓர் அதிகாரத்தைக் குறிப்பிட்டு, அதில் உள்ள 10 குறள்களையும் சரியாகச் சொல்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்து, அதன்படி பணமும் அளிப்பார். திருக்குறளில் விநாடி வினா, முற்றோதலை நடத்தி, தேர்வர்களை ஊக்குவிப்பார்.
உற்ற நண்பன்தான் திருக்குறள்
என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது, அதிலிருந்து அவரும், நானும் மீண்டு வருவதற்கு திருக்குறள் உற்ற தோழனாக இருந்தது. 'ஊக்கமுடைமை' அதிகாரத்தில் உள்ள ஒரு குறளுக்கு, 'உடல் முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும், யானை தனது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்' என்று பொருள். கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் திருக்குறளே அளித்தது.
சமூக ஊடகங்களில் குறள் எப்படி?
2024-இல் ஆகாஷமூர்த்தி நடத்திய அரசு ஊழியர்களுக்கான திருக்குறள் விநாடி-வினாப் போட்டியில், என் கணவர் பகலவன் முதல் பரிசு பெற்றார். இந்த ஊக்கத்தால் 'பகல்பரமு' என்ற பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்து, திருக்குறள் குறித்துப் பேசினோம். சமூக ஊடகங்களில் ஓராண்டாக ரீல்ஸ்களில் குறள்களைச் சொல்ல ஆரம்பித்தோம். திருக்குறள் சார்ந்த கேள்வி - பதில்கள், சிறப்புகளைப் பதிவுகளாகப் போடுகிறோம். இதனால் எங்களை 'திருக்குறள் தம்பதி' என்று ஆகாஷமூர்த்தி பாராட்டினார்.
ஒவ்வொருவரும் திருக்குறளை அறிய வேண்டும்
தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இயல்பாக ஒரு வேலை செய்துகொண்டே திருக்குறளைப் பற்றிச் சொல்லும்போது, சாமானியர்களிடமும் பதிய வைக்க முடியும். குறள் சொல்லும் கருத்துகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
காதில் விழும் வார்த்தைகள் படிப்படியாக குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து, திருக்குறள் மீதான ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். எங்கள் மகள் பவ்யாவுக்கு ஒன்றே முக்கால் வயதிலிருந்தே திருக்குறளைச் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதுவரை 100 குறள்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
1330 குறள்களையும் மனப்பாடமாகச் சொல்லி முற்றோதல் செய்யும் வகையில் வருங்காலத்தில் அவளைத் தயார்படுத்தும் எண்ணம் உள்ளது. நாங்கள் வசிக்கும் பகுதியில் மாணவர்களுக்காக திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்துகிறோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் பலர், தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பதாக எங்களுக்குத் தகவல் அளிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு குறள்களை கற்றுக் கொடுத்தால் போதும். அந்தக் குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் வரை பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வயதுக்கேற்ப குறள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 'திருக்குறளில் இல்லாததும் இல்லை; சொல்லாததும் இல்லை' என்பார் பாரதிதாசன்.
திருக்குறளை அறிந்தால் வாழ்க்கையை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் என் கணவரும் நானும் பங்கேற்றது, மன நிறைவை அளித்தது. கடலூரில் 'இலக்கியச் சோலை' என்ற அமைப்பில் திருக்குறள் குறித்துப் பேசியிருக்கிறேன். திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையை எண்ணற்ற மாணவர்கள் பெறும் வகையில், அவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என்கிறார் பரமேஸ்வரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.