உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு ரூல் கர்வ் விதிப்படி கடந்த 9 நாள்களாக திறந்து விடப்பட்ட உபரிநீர் திங்கட்கிழமை நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2006, 2014 ஆம் ஆண்டு 142 அடி அளவிற்கு தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரையில் தேக்கி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் கேரள அரசும் அங்குள்ள சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதிப்படியே தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தற்போது முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதிமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த விதியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20ஆம் தேதி வரையில் 136.40 அடிக்கும் , ஜூலை 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 137 அடிக்கும் , ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 137.50 அடி வரைக்கும், ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை 138.40 அடி வரைக்கும், ஆகஸ்ட் 31 வரை 139.80 அடி வரைக்கும், செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 140.90 அடி வரைக்கும், செப்டம்பர் 20 வரை 142 அடி தண்ணீரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.
அதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி 142 அடிக்கும் , அக்டோபர் 31-ல் 138 அடியாகவும் பிப்ரவரி 30 முதல் மார்ச் 31 வரை படிப்படியாக உயர்த்தி 142 வரைக்கும் தண்ணீரை நிலைநிறுத்தி தேக்கி கொள்ளலாம் எனவும் அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக முல்லைப் பெரியாருக்கு நீர்வரத்து அதிகரித்தது . ரூல் கர்வ் விதியின் படி அக்டோபர் 31 வரையில் 138 அடிவரை தண்ணீர் தேங்கி கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 17ஆம் தேதி இரவு 138 அடியை எட்டியது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அதை உபரிநீராக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டனர். கடந்த 9 நாள்களாக தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றமும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஆனால் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வழக்கம் போல் விநாடிக்கு 1,822 கன அடி நீர் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறந்து விடப்படுகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 137.80 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1789 கன அடியாகவும், அணையில் 6571.60 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
இதையும் படிக்க: மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.