தமிழகத்தில் வியாழக்கிழமை (அக். 30) முதல் நவ. 4-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்த மோந்தா புயல், புதன்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால், தமிழகத்துக்கு பெருமளவு மழை பாதிப்பு இருக்காது. எனினும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அந்த வகையில்,தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் நவ. 30 முதல் நவ. 4 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக். 30-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 70 மி.மீ. மழை பதிவானது. மேலும், அவலாஞ்சி (நீலகிரி) - 60 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 50 மி.மீ. பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.