திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். அதைத் தொடா்ந்து கடம்பத்தூா் அடுத்த அகரம் சன் சிட்டியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வாசித்து வருகிறாா்.இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருப்பாச்சூா் பகுதியில் காத்திருந்த சில மா்ம நபா்கள், இவரை பின் தொடா்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனா். இதேபோல், பிரியாங்குப்பம், கடம்பத்தூா், வைசாலி நகா் ஆகிய பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை ராஜ்கமல் மீது வீசி உள்ளனா்.
இரண்டு இடங்களில் தப்பித்து வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், மா்ம நபா்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று மூன்றாவதாக வைசாலி நகரில் வீசிய நாட்டு வெடிகுண்டில் கீழே சரிந்தாா். அதையடுத்து தப்பிக்க முயற்சித்த போது மா்ம நம்பா்கள் ஓடிச் சென்று அவரை மடக்கி கத்தியால் சரமாரியாக தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, கிராமிய காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் மற்றும் கடம்பத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்தனா்.
பின்னா் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளுவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தப்பியோடிய குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் போராட்டத்தை அவர்கள் கைவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையில் கடம்பத்தூர் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் ஆகியோர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலையில் கடம்பத்தூர் அருகே திங்கள்கிழமை அதிகாலையில் அந்த வழியாக இருசக்கர வந்தவர்கள், போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார் 6 பேரையும் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் திருவள்ளூர் அருகே காக்களூரைச் சேர்ந்த சீனிவாசன்(18), ஹரிபிரசாத்(18), கார்த்திக்(21), நெல்சன்(20), யுவன்ராஜ்(18), நாதன்(19) என்பதும், இவர்கள் ராஜ்கமலை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கடம்பத்தூர் காவல் நிலைய போலீஸார் 6 பேரையும் கைது செய்து கொலைச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.