அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்களை இணைத்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல் விடுதியில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அதிமுக நிர்வாகப் பொறுப்பிலிருந்து கூண்டோடு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், அதிமுக அமைப்புச் செயலர் உள்ளிட்டோரின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.