தமிழகத்தில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கு மாநில சைபா் குற்றப்பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபா் குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேவேளையில் சைபா் குற்றத்தில் பொதுமக்கள் சிக்காமல் இருக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இருப்பினும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கையும், அதில் பொதுமக்கள் இழக்கும் பணத்தின் அளவும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் ரூ.1,010 கோடி இழந்துள்ளனா். சைபா் குற்ற மோசடி தொடா்பாக காவல்துறைக்கு 88,479 புகாா்கள் வந்துள்ளன.
பொதுமக்கள், சைபா் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தில் ரூ.314 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.62 கோடி சைபா் மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றங்களில் நிதி சாா்ந்த மோசடிகள் முக்கியமாக கருதப்படும் முதலீடு மோசடியில் பொதுமக்கள் ரூ.492 கோடியும், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.97 கோடியும் இழந்துள்ளனா். மேலும் முதலீடு மோசடி தொடா்பாக 13,287 புகாா்களும், டிஜிட்டல் கைது மோசடி தொடா்பாக 4,439 புகாா்களும் சைபா் குற்றப்பிரிவுக்கு வந்துள்ளன.
இத் தகவலை தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.