நமது நிருபர்
"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் மின் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
தில்லியில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) ஏற்பாட்டில் 6-ஆவது சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்றுப் பேசியது:
இந்தியாவின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி புரட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மொத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறன் 25,500 மெகாவாட்டுடன் நாட்டில் 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.
காற்றாலை திறனில் 11,500 மெகாவாட் உற்பத்தியுடன் நாட்டிலேயே 2-ஆவது இடத்திலும், மொத்த சூரிய சக்தி 10,700 மெகாவாட்டுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளது. நீர் மின்சாரம் 2,323 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரதமர் சூர்ய கர் திட்டத்துக்கு முன்னரே தமிழ்நாட்டில் மேற்கூரை சூரிய சக்தி 239 மெகாவாட்டாகவும், இத்திட்டத்துக்குப் பிறகு 290 மெகாவாட்டாகவும் உள்ளது. இன்று, இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதாவது, 20 ஜிகா வாட்டுக்கும் அதிகமான நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க திறனை தமிழகம் கொண்டுள்ளது. இதில் 10 ஜிகாவாட்டுக்கும் அதிகமானவை காற்றாலை மின்சாரத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது.
தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியையும், 2,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியையும் அதிகரித்து தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆற்றல் மாற்றம் என்பது கொள்திறனை அதிகரிப்பது மட்டுமல்ல, ஒருங்கிணைப்பு, புதுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை குறித்த எல்லைகளையும் உள்ளடக்கியது என்று நம்புகிறது என்றார் அமைச்சர் சிவசங்கர்.
இந்த நிகழ்வில் இலங்கை அரசின் எரிசக்தி துறை அமைச்சர் குமார ஜயக்கொடி, இந்திய அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சக செயலர் சந்தோஷ் குமார் சாரங்கி, தில்லி அரசின் மின் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.