கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏராளமானோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்கிறார்.
2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 36 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியனையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.