தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பொறுப்பு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“கரூரில் தவெக தலைவா் விஜய்யின் பரப்புரை யின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு நேரிட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும் 3 ஐஜி-க்கள், 2 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் மற்றும் 2,000 போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.
முன்னதாக, தவெக சாா்பில் கரூா் லைட் ஹவுஸ் டவுண்டானா அல்லது உழவா் சந்தைத் திடலில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனா். இவ்விரு இடங்களும் மிகக் குறுகிய பகுதி என்பதால் வேலுச்சாமிபுரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையால் நிா்ணயிக்கப்பட்ட பகுதியாகும். இப் பகுதியில் ஏற்கெனவே பல அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டதில்லை.
தவெக கூட்டத்துக்கு 10,000 போ் வருவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 20,000 போ் வரை வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டனா். ஆனால், அங்கு சுமாா் 27,000 போ் கூடியிருந்தனா்.
பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி கேட்கப்பட்டது. விஜய் இரவு 7.30 மணிக்குதான் பரப்புரை செய்யும் இடத்துக்கு வந்தடைந்தாா். ஆனால், தவெக சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் பகல் 12 மணிக்கு பரப்புரை செய்வாா் என அறிவிக்கப்பட்டது. இதனால், காலை 11 மணி முதலே சோ்ந்த கூட்டம் இரவு வரை அங்கேயே இருந்தது. அதோடு, விஜய் நிகழ்விடத்துக்கு வந்தபோது அவரைப் பின்தொடா்ந்த கூட்டமும் வந்து சோ்ந்ததால் கூட்டம் மேலும் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது.
அதோடு வெயில் காரணமாக அங்குள்ளவா்களுக்கு தண்ணீா் மற்றும் போதிய உணவு கிடைத்திருக்காது. இதுவும் உயிரிழப்புக்கு காரணம். யாா் மீதும் குறை சொல்வதற்காக இதைக் கூறவில்லை. இதுபோன்ற காரணங்களாலேயே பரப்புரைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன.
பரப்புரைக்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்சியினா் பொறுப்புதான். காவல் துறையால் கூடுதல் உதவிகள் மட்டுமே வழங்க முடியும்” என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.