டூர் மோடில் பிரதமர் மோடி! தமிழ்நாட்டை 'தட்சிண பிரதேஷ்' என மாற்றிவிடுவார்கள்! முதல்வர் விமர்சனம்
திருச்சி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில் இன்று திருச்சி, கரூரில் பிரசாரம் செய்கிறார்.
திருச்சியில் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துக்கு விட்டு முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தில்லியில் தமிழகத்தை அடகுவைத்துவிடுவார் பழனிசாமி. அவர் முழு சங்கியாகவே மாறிவிட்டார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் தில்லியில்தான் நடந்தது.
தமிழ்நாடு தமிழ்நாடாகவே இருக்க வேண்டும் , உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மாநிலம்போல வன்முறைக் காடாக மாறிவிடக் கூடாது. அதிமுக - பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை 'தட்சிண பிரதேஷ்' என்றுகூட மாற்றத் தயங்கமாட்டார்கள். நம் எதிரிகளையும் உதிரிகளையும் வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணிக்கு வழக்கம்போல நீங்கள் இம்முறையும் தோல்வியைத் தர வேண்டும்.
தமிழ்நாடு அனைத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. அதனை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திருச்சியைப் பொருத்தவரை சென்னைக்கே சவால்விடும் அளவுக்கு திருச்சி வளர்ந்துள்ளது.
எப்போதும் டூர் மோட் -ல் இருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் சாதனைகள் தெரிந்திருக்க வில்லை. தமிழ்நாட்டில் தங்கி இருந்து தமிழ்நாடு எவ்வளவு சிறந்த மாநிலமாக இருக்கிறது, இங்கு என்னென்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என அவர் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு பாஜக கடந்த 11 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி ஒருமுறை கூறியிருக்கிறாரா?
பெண்கள் சேலை வாங்கினால்கூட அவர்களுக்குப் பிடித்த கடையில், டிசைனில் வாங்க வேண்டும் என விரும்புவார்கள். அதை மனதில் வைத்துதான் இல்லத்தரசி கூப்பன் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த திட்டத்தில் எல்லாமே பெண்களாகிய உங்கள் சாய்ஸ்தான்" என்று பேசினார்.