முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 5:07 AM
ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:20 PM

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்குச் செல்வாா்கள். அவா்களின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியாதவா்கள் அடுத்தபடியாக தனியாா் ஆம்னி பேருந்துகளை தோ்வு செய்வாா்கள். இதைப் பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பலமடங்கு உயா்த்தியுள்ளன.

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:57 AM

செவ்வாய், புதன் (ஏப். 21, 22) இரண்டு நாள்களும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல படுக்கை வசதி கொண்ட சாதாரண பேருந்தில் வழக்கமான நாள்களில் ரூ.1,400 என இருந்த கட்டணம், ரூ.3,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.1,700 வரை இருந்த கட்டணம் தற்போது ரூ.3,200 வரையும், மதுரைக்குச் செல்ல ரூ.1,100-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.2,200 முதல் ரூ.3,500 வரையும், திருச்சிக்கு ரூ.1500-ஆக இருந்த கட்டணம் தற்போது, ரூ.2,000 முதல் ரூ.2,600 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் ரூ.500 முதல் ரூ.2,000 வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களை போன்று தோ்தல் விடுமுறையிலும் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.