மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய அதிகாரி கைது!
மின்வாரிய அதிகாரி கைது தொடர்பாக...
ஆவடி: ஆவடியில் மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளரை ஊழல் தடுப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆவடி கோவில்பதாகை பொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் விவசாயி ராகவன் (47).
இவர் இதே பகுதியில் புது வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
Advertisement
இதனை பரிசீலனை செய்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (47) என்பவர், மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், பணத்தை கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை ராகவன் கொடுத்து பாலசுப்பிரமணிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ராகவன் கோயில்பதாகை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பாலசுப்பிரமணியனிடம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.
அதனை அவர் வாங்கிய போது, மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வாளர் மாலா ஆகியோர் தலைமையில் போலீஸார் கையும் களவுமாக பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.