ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஸ்டாலின் சாதனை: இபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக...
கடந்த 2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் திருமண விழாவில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், “அ.தி.மு.க. வலுமையான இயக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். டெல்டா மாவட்ட விவசாயிகள் பல்வேறு இயற்கை சீற்றங்களால் சோதனைகளைச் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
அப்படி சோதனை வரும் போதெல்லாம் விவசாயிகளுக்கு நேசகரம் நீட்டிய இயக்கம் அதிமுக அரசு. விவசாயிகள் துன்பத்தில் இருக்கும்போது தானாக முன்வந்து உதவி செய்யும் அரசு அதிமுக அரசு. துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது விவசாயிகள் பதறிப் போயிருந்தனர்.
நிலங்களை காக்க வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்கத்தினர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு மத்திய அரசிடம் பேசி, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டரீதியாக அறிவித்தோம்.
அதிமுக என்றால் அது மக்களின் இயக்கம். திமுக குடும்ப இயக்கம். எவ்வளவு சோதனைகளை நாம் சந்தித்தோம். எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை அ.தி.மு.க., பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
எந்த அரசுக்கும் வராத சோதனைகளைச் சந்தித்த போதிலும், பல்வேறு சாதனைகளைப் படைத்த போதிலும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய்தான் கடன் இருந்தது.
அரசுக்கு ஒரு ஆண்டு எந்த வருமானமும் இல்லை. கரோனா காலத்தில் அரசுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. இப்படியான சூழலிலும் சிறப்பான ஆட்சியை அ.தி.மு.க. அரசு வழங்கியது.
2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மக்களின் தலைகளில் கடனை சுமத்தியதுதான் ஸ்டாலின் அரசின் சாதனை. வேறு எந்த சாதனையும் செய்யவில்லை” என்றார்.