அருவருப்பான பேச்சு! - நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "முதலில் வீட்டில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும், த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் நடிகை த்ரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா சார்பில் அவரது வழக்குரைஞர் நித்யேஷ் நட்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதில் த்ரிஷா தரப்பில், "மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற அருவருக்கத்தக்க, பொருத்தமற்ற ஒரு கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. அப்படி இருக்கவும் விரும்பவில்லை. கடந்த காலங்களைப் போலவே, நான் அரசியலைப் பொருத்தவரை நடுநிலையுடன் இருக்கவே விரும்புகிறேன்.
தொழில்ரீதியாக என்னை பேச வேண்டுமேதவிர அரசியல்ரீதியாக என்னைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
எனக்கு தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் எனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.