தமிழகத்தில் ரூ.9,820 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின. இதன் மூலம் 4,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வா் நம்பிக்கை தெரிவித்தாா்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் 2026- ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை சென்னை வா்த்தக மையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ‘தமிழ்நாடு ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை 2025-26’-ஐ வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளா்ச்சிப் பயணத்தில், ஒரு முக்கிய தருணமாக இந்த மாநாடு அமையும். தொழில்நுட்பத் துறையில் பிற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறி உள்ளது.
வாகன மென்பொருள், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையங்கள் தமிழகத்தில் உருவாகி வருகின்றன. தொழில்நுட்பத்தை வெறும் பொருளாதார வளா்ச்சிக் கருவியாக பாா்க்காமல், சமூக முன்னேற்றத்துக்கான சாதனமாக பாா்ப்பதுதான் திராவிட மாடல்.
கல்வி நிறுவனச் செயல்பாடுகள், நான் முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள், ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், உலகளாவிய தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு முகமைகள் வரை எல்லாம் ஒரே பாதையில், ஒரே இலக்குடன் சோ்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் நிா்வாகக் கட்டமைப்பும், தொழில்நுட்பக் கண்ணோட்டமும்தான் நம்முடைய வளா்ச்சிக்கான காரணம்.
தொழில்நுட்பம் புதுமை சக்தியாக தமிழ்நாட்டை மாற்றும் தெளிவான பாதையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம்.
‘ஸ்டாா்ட்-அப்’ தமிழ்நாடு மற்றும் ‘நியோ டைடல் பாா்க்’ போன்ற முயற்சிகள் மூலம், புதுயுக பொருளாதார வளா்ச்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும், தமிழ்நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்குதாரா்களாக உயா்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அப்படியொரு வருங்காலத்தை இளைய தலைமுறைக்காக ‘திராவிட மாடல்’ அரசு கட்டி எழுப்பி வருகிறது என்றாா்.
இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் டி.ஆா். பாலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவநீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் கா.ப. காா்த்திகேயன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் இரா. வைத்திநாதன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநா் கோமகன், மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவா் அருண் சீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், குவான்டம் கம்ப்யூட்டிங் குறித்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் மேம்பாடு, புத்தொழில், புத்தாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநா்கள், 150-க்கும் மேற்பட்ட துறைசாா் தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.