தமிழ் என்ற அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயலக தமிழர் விழாவில் அவர் பேசுகையில், அயலக தமிழர் தினத்தை திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறது. தமிழ் மொழி என்பது நம் அனைவரையும் இணைக்கக்கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப் பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம்முடைய தாய் மொழி, தமிழ் மொழி. தமிழ் அடையாளத்திற்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போடவும் முடியாது.
சாதி, மதம், ஏழை, முதலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான். அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான் தரணியை வென்றுகொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அந்தவகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைப்பது மிகமிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. அதைவிட முக்கியம் அவர்களின் நலன்களை பாதுகாப்பது ஆகும்.
ஆரம்பத்தில் சிறிய வேலைக்காக தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றனர். ஆனால் இன்று மருந்துவர்களாக, பொறியாளராக வெளிநாட்டில் பெரிய வேலையில் இருக்கின்றனர். இந்த வளர்ச்சி தானாக நடந்த வளர்ச்சியல்ல. இந்த முன்னேற்றத்திற்கு பெயர்தான் திராவிட மாடல். இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும்போது தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் அயலக தமிழர் நலவாரியம் தொடங்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில் “தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் - 2026 விழாவினையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.