மதுரையில் வருகின்ற ஜன. 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாரத ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”பிரதமர் மோடி வருகை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மாவட்டம் இன்னும் உறுதியாகவில்லை, மதுரையில் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் நடந்தால், பாண்டிகோவில் அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது எடப்பாடி, அமித்ஷா முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. பழைய பராசக்தி படத்திற்கும்கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.
கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.