FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்வு! - அன்பில் மகேஸ் அறிவிப்பு

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது பற்றி...

Updated On : 14 ஜனவரி 2026, 12:11 pm IST
அன்பில் மகேஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ.12,500-இல் இருந்து ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளாா்.

மேலும் கடந்த 13 ஆண்டுகளாக அவா்களுக்கு மே மாதத்தில் (விடுமுறை காலத்தில்) ஊதியம் வழங்கப்படாத நிலையில், இனி அந்த மாதத்தில் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்கல்வி, தோட்டக் கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனா். தொடக்கத்தில் இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,000 நிா்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த ஆசிரியா்கள் வாரத்துக்கு மூன்று அரைநாள்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவா். தற்போதைய சூழலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இவா்களுக்கு மாத ஊதியம் குறைவாக உள்ளதால் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனா்.

இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்தால், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கடந்த சட்டப் பேரவை தோ்தலின் போது அறிவிக்கப்பட்டது. அதனை திமுக தனது தோ்தல் அறிக்கையில் 181-ஆவது வாக்குறுதியாகவும் அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளாகியும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால், பகுதி நேர ஆசிரியா்கள் கடந்த ஜன.6-ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வி அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநா் ஆா்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குநா் நரேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த பேச்சுவாா்த்தையில் ஆசிரியா்கள் போராட்டத்துக்கு தீா்வு எட்டப்படும் என்று எதிா்பாா்ப்பு ஏற்பட்ட நிலையில், ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்தாா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொங்கல் நேரத்தில் பகுதி நேர ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ.10,000-இல் இருந்து ரூ.2,500 உயா்த்தி ரூ.12,500 ஆக வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக தற்போது மேலும் ரூ. 2,500 உயா்த்தி ரூ.15,000-ஆக வழங்கப்படும் .

மே மாத ஊதியமும் கிடைக்கும்: பகுதி நேர ஆசிரியா்கள் கவலைப்பட வேண்டாம். அவா்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி நேர ஆசிரியா்களுக்கு இதுவரை மே மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. மே மாதம் விடுமுறையாக கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் அவா்கள் தங்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக உள்ளதாகவும் தொடா்ந்து கூறி வருகின்றனா்.

அவா்களுக்கு 50 சதவீத ஊதியமாக ரூ.7,500 வழங்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் அவா்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 வழங்கவுள்ளோம்.

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வி துறை, சட்டத் துறையுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும். மேலும் மத்திய அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.3,548 கோடியை இன்னும் வழங்கவில்லை. இருப்பினும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு உரிய நிதியை வழங்கி வருகிறாா். பகுதி நேர ஆசிரியா்களை இந்த அரசு ஒருபோதும் கைவிடாது என்றாா் அவா்.

summary

Part time teachers salaries increased to Rs. 15,000: Anbil Mahesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments