தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என தலைமை அறிவுறுத்தியுள்ளதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்போது ஆட்சியில் பங்கு, தவெகவுடன் கூட்டணி உள்ளிட்டவை குறித்தும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் தெரிய வந்துள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என தலைமை அறிவுறுத்தியுள்ளது. தலைமை எடுக்கும் முடிவை மாநில காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும் என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் தொடர்பாக கட்சி தலைமையே முடிவெடுக்கும். தமிழக தலைவர்களின் கருத்துகளை பரிசீலித்து உரிய நேரத்தில் ராகுல் காந்தி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.