தமிழகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. கடந்த, 2024 -2025-இல் மின்வாரியம் 2,364 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மின் இணைப்புகளுக்கும் தமிழ்நாடு மின்வாரியத்தின், மின்பகிா்மானக் கழகம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. பெரிய அளவிலான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களுக்கு அதன் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப உயரழுத்த அல்லது தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. 150 கிலோ வாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு தாழ்வு அழுத்த பிரிவிலும், அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், அதிக மின்சாரம் பயன்படுத்தும் பெரிய ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து மின்சாரத்தையும் மின்வாரியத்திடம் இருந்து வாங்க முடியாது என்பதால், சொந்தமாக மின் நிலையங்கள் அமைத்தும், தனியாரிடம் வெளிசந்தைகளில் இருந்து மின்சாரத்தை வாங்கியும் பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின்வாரியத்திடம் இருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தாழ்வழுத்த பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8.25-க்கும், உயரழுத்த பிரிவு தொழிற்சாலைகள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7.50-க்கும் மின்வாரியத்திடம் இருந்து வாங்குகின்றன. இந்தக் கட்டணம் அதிகமாக இருப்பதால், தொழிற்சாலைகள் மின்சாரத்துக்கு மட்டுமே மாதம்தோறும் பல லட்சம் ரூபாயை மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனால், பெரும்பாலான பெரிய அளவிலான பல நிறுவனங்கள் மின்வாரியத்திடம் இருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் அளவை குறைத்துள்ளன. அதன்படி, 2022-2023-இல் 2,510 கோடி யூனிட்கள் தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2023-2024-இல் 2,435 கோடி யூனிட்களாகவும், 2024-2025-இல் 2,364 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது என்றனா்.
இதுகுறித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. இது, தொழிற்சாலைகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள், சொந்த மின் பயன்பாட்டுக்காக காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து, மின்வாரிய வழித்தடம் வாயிலாக எடுத்து வந்து பயன்படுத்துகின்றன.
இதற்கான, மின் வழித்தட கட்டணத்தையும் மின்வாரியத்துக்கு ஆலைகள் செலுத்துகின்றன. இதன்மூலம் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் மின்சாரத்துக்கான நிதிசுமை இலகுவாகிறது.
இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் முன்னேற்றத்துக்கு ஒரு வடிகாலாகவும் மாறும் என்றாா் அவா்.