தமிழக ஆளுநர் சார்பாக மக்கள் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தொடங்கியவுடன் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து, ஆளுநர் வெளியேறியது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட மக்கள் மாளிகை(ஆளுநர் மாளிகை), ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டது உள்ளிட்ட 13 காரணங்களைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
“மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது மரபு என்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவரிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். ஆனாலும், அவர் அதனை ஏற்க மறுக்கிறார்.
தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்குமாறு ஆளுநரிடம் மிகவும் தாழ்மையுடன் பேரவைத் தலைவர் அப்பாவு கேட்டுக் கொண்டார். ஆனால், அதனை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மைக் அணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் எந்த மைக்கும் அணைக்கப்படவில்லை. அணைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது.
எதிர்க்கட்சிகள்கூட சொல்லாத குற்றச்சாட்டுகளை ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக பொய்யான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு அன்னிய முதலீட்டில் 6 வது இடத்துக்கு சென்றுவிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால், 11.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழகம் என்று மத்திய அரசே தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் கூறியது முற்றிலும் பொய்யான கருத்து என்பது மத்திய அரசின் அறிக்கைகளே தெரிவிக்கிறது.
ஆளுநர் வெளியேறியவுடன் மக்கள் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியாகிறது என்றால் முன்பே தயாரித்து வைத்துவிட்டு தான் செயல்படுகிறார்கள்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்துதான் வருகின்றது. அதனைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. தமிழக எல்லைகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு போதைப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.