அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் அனுபவமும் வியூகங்களும் திமுக ஆட்சியை அகற்ற முக்கியப் பங்கு வகிக்கும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது பற்றி அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும் தேர்ந்த வியூகங்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற முக்கியப் பங்கு வகிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். முன்னதாக என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு அண்ணாமலைதான் காரணம் என்றும் இப்போது பாஜக கூட்டணியில் இணைய அவர் வலியுறுத்துவதாகவும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
என்டிஏ கூட்டணியில் அமமுக!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. இன்று(ஜன. 21) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அமமுக டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி உருவாகியுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க, எங்களுடைய பங்காளிச் சண்டை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.