அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சித்து நடக்கிறது. அந்தவகையில் பாமகவின் அன்புமணி தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன்.
பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது என்று நோக்கத்தோடு முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்" என்று தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் இன்று காலை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்திக்கவிருக்கிறார். அப்போது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கடந்த தேர்தலிலும் என்டிஏ கூட்டணியில் இருந்த அமமுக, கூட்டணியில் அதிமுக இணைந்ததால் விலகியது. என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகினார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.