நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு "ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி"யை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.
அதிமுக தலைமையிலான நம் வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இன்றைய நமது கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், ஆளுங்கட்சி திமுக-வை ஆட்டம் காண வைத்துள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், "திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி" என்ற உண்மையை உரக்கச் சொன்ன பா.ம.க. தலைவர் அன்புமணிக்கும், "மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியை அகற்றி, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து அயராது உழைக்க வேண்டும்" என்று உரைத்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்பைச் சார்ந்த தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் மு.க.ஸ்டாலின் பார்த்து அலறிப் போய் விட்டார் போல. உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்.
"அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்" என்பார்கள். ஆனால், நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு "ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.
"மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே?" என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா?
இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #FraudModel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது !
குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம்.
மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!
எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே மு.க.ஸ்டாலினே-
இது தொடக்கம் தான்...
Lot more to come! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.