FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி 2026, 7:55 pm IST
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதோ ஒரு திட்டத்தில் பயனடையும் வகையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரமாக மகளிர் உரிமைத் தொகை! அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம்! சொந்த ஊரை விட்டு வெளியூரில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு மாவட்டந்தோறும் தோழி விடுதிகள்! அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால், மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்! அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள்! அதன் மூலமாக இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! அந்த வேலைவாய்ப்புகளைப் பெற, நான் முதல்வனில் திறன் பயிற்சி! மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள், சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள் என்று உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

நீங்கள் கெத்தாகச் சொல்லலாம்... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்களும் இருக்காது; இத்தனை பயனாளிகளும் இருக்க மாட்டார்கள்! தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடு மட்டும்தான்! ஒன்றிய அரசு மாநிலங்களை ஒப்பிட்டு எந்தத் துறையில் விருதுகள் கொடுத்தாலும், அதைத் தமிழ்நாடுதான் வாங்குகிறது!

Advertisement

Advertisement

இவ்வாறு, அனைத்திலும் நாம் ‘நம்பர் ஒன்’-ஆக இருந்தாலும், பட்ஜெட் என்று வந்துவிட்டால் நமக்கு ஒன்றும் கிடையாது! இந்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்தாவது, ஏதாவது ‘எலக்‌ஷன் ஸ்டண்ட்’ செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்! கடைசியில் அதுவும் இல்லை. வழக்கம்போல ஈரத்துண்டுதான்!

தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியைக் கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியைக் கொடுங்கள், புதிய ரயில் திட்டங்களைக் கொடுங்கள், ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதியைக் கொடுங்கள், வரி வருவாயில் 50 சதவிகிதமாகக் கொடுங்கள், “நீட்”டில் இருந்து விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுங்கள், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கையைக் கொடுங்கள், இதையெல்லாம்தான் நாங்கள் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்கிறோம்! ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்தது வெறும் ஜீரோ! அப்போது நாமும் அவர்களுக்கு எலக்‌ஷனில் அதையேதான் திருப்பித் தர வேண்டும். பா.ஜ.க. மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக N.D.A. கூட்டணியும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் போன்றே, சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும்!

தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது முழுவதுமாக N.D.A. பழனிசாமியாக மாறி நிற்கிறார்! “நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்” என்று சொல்வது போன்று, மைக் முன்னால் நின்று கொண்டு, “நான்தான் கூட்டணிக்குத் தலைமை, நான்தான் கூட்டணிக்குத் தலைமை” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சொல்லவில்லை... புலம்பிக் கொண்டிருக்கிறார்!

இந்த நிலையில், ஒரு வித்தியாசமான போராட்டத்தை இப்போது அவர் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலைத் திட்டத்தை நாம் தடுக்கிறோமாம். அதற்காகப் போராட்டமாம். அவர் முதலில் அந்தச் சட்டத்தைப் பற்றி எதையாவது படித்தாரா? அந்தச் சட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியுமா? அப்படி இருந்தால், அவருடைய அறிக்கையில் அதை ஏன் குறிப்பிடவில்லை? 100 நாள் வேலை என்பது, உரிமையாக இருந்தபோதே 50 நாள்கூட பா.ஜ.க. அரசு வேலை தரவில்லை! இப்போது எவ்வாறு 125 நாள் கொடுப்பார்கள்? இதில் என்ன என்றால், இனி மாநில அரசுதான் 40 விழுக்காடு நிதியைத் தர வேண்டும் என்று வேறு மாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் பழனிசாமிக்குத் தெரியுமா, தெரியாதா? என்ன சட்டம், என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாமல், இவர் வந்தால் 150 நாட்களுக்கு உயர்த்துவோம் என்று வேறு அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இப்போது இருக்கிறார் பழனிசாமி.

அவர்கள் கூட்டணியில் இருக்கும் டிசைனைப் பாருங்கள். அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, முதலில் சசிகலாவை முதலமைச்சராக்க நினைத்தார்கள். அது முடியாமல் போன காரணத்தினால்தால், கூவத்தூரில் வைத்துப் பழனிசாமியைக் கொண்டு வந்தார்கள். தனக்குப் பதவி கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கினார் பழனிசாமி! கடந்த தேர்தலில் அனைவரும் பிரிந்து பிரிந்து நின்றார்கள். இப்போது, அதில் பாதி பேர் பா.ஜ.க.வுடனே திரும்ப வந்து சேர்ந்து கொண்டு இணைந்துவிட்டார்கள். இவர்கள் மொத்தத்தில் மக்கள் நலனுக்காக கூட்டணி நடத்தவில்லை. இவர்களுக்குள்ளே ‘மியூசிக்கல் சேர்’-தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நடக்க இருக்கும் தேர்தல், ஒட்டுமொத்த தமிழ்நாடு வெர்சஸ் N.D.A.! இதில் நாம் தமிழ்நாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை! தினமும் காலையில் சூரியன் உதிப்பதைப் போன்று அவர்களுக்கு அது ஒரு ரொட்டீன்! ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று தில்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அ.தி.மு.க.வும் அடையப் போகிறது. இதுவரை அடைந்த வெற்றிகளைவிட மிகப்பெரிய வெற்றியைத் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அடையப் போகிறது.

வளர்ந்த தமிழ்நாட்டை, மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம். அதற்கு இளைஞரணியினர் உங்களுடைய முழு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்!

உழையுங்கள்! அதுவும், உங்கள் தனித்தன்மை அனைவருக்கும் தெரிவது போன்று உழையுங்கள்! உங்கள் உழைப்பால் கழகத்தையும், மாநிலத்தையும் உயர்த்துங்கள்! அடுத்து வெற்றி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம்! தமிழ்நாடா – N.D.A.-வா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Chief Minister Stalin has criticized that Edappadi Palaniswami has become a branch secretary of the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments