தமிழ்நாடு

குடியரசு தின அணிவகுப்பு: பாரம்பரியம்-நவீனத்தைப் பிரதிபலிக்கும் தமிழக அலங்கார ஊா்தி!

குடியரசு தின அணிவகுப்பில் இன்று முழு ஒத்திகை அணிவகுப்பு

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

நாட்டின் 77-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் "வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா' எனும் கருப்பொருளில் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது.

வரும் ஜனவரி 26}ஆம் தேதி 77-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தில்லி கடமைப் பாதையில் நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் கண்கவர் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நிகழாண்டு அணிவகுப்பின் கருப்பொருள் "வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள்' என்பதாகும். இதில் தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 13 அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 30 அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன. ஏறத்தாழ 2,500 கலைஞர்கள் தங்கள் கலாசார நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

தமிழகத்தின் அலங்கார ஊர்தி:

சுழற்சியின் அடிப்படையில் கடந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்கவில்லை. இந்த முறை தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது. இதற்கான தேர்வுக்காக ஆறுமுறை நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

தமிழகத்தின் அலங்கார ஊர்தி குறித்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா' என்ற கருப்பொருளை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் அலங்காரஅணிவகுப்பு ஊர்தி, பாரம்பரியத்தையும் நவீனதொழில்நுட்பத்தையும் இணைத்து வழங்குகிறது. தமிழ்நாடு, மின் வாகன (இவி) உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவெடுத்திருக்கிறது.

இதை குறிக்கும் விதமாக அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் தமிழ்நாட்டின் கலாசார வலிமை, மாறாத உணர்வையும் குறிக்கும் வகையில், டெக்னோ} ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர் துணிச்சல், திறமை, மற்றும் பாரம்பரியத்தை குறிக்கிறார். ஒளிரும் சுற்று வடிவங்களுடன் காட்டப்பட்டுள்ள காளை உருவம், பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதைக் காட்டுகிறது.

இயற்கையும், நவீனமும்..:

அலங்கார வாகனத்தின் நடுப்பகுதியில், மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியை காட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோடிக் கரங்கள் பேட்டரி அலகுகளை இணைப்பதைக் காட்டுவது துல்லியமான தொழில்துறை நிபுணத்துவத்தை எடுத்துரைக்கிறது. வாகனத்தில் இடம்பெற்றுள்ள மின் வாகன மின்தொடர்பு நிலையம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தை தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டுக்கு வலியுறுத்துகிறது.

அலங்கார ஊர்தியின் பின்பகுதியில், இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுடன் பொருந்திய வாழ்வு, நவீனம் மற்றும் இயற்கையை காட்சிப்படுத்தும் மரம் வடிவமைப்பானது, சூழலியல் மற்றும் தொழில்துறை இடையேயான சமநிலையை குறிக்கிறது.

அணிவகுப்பின் இருபுறமும், மயிலாட்டம் ஆடும் பாரம்பரிய பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சுற்றும் வீரமங்கையர்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தின முழு ஒத்திகையில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT