தேர்தல் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைதருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துரோகங்களை தமிழ்நாடு எண்ணிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ. 3,458 கோடி சமக்ரசிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பாஜகவின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப் பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
மகாத்மாக காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜி ராம் ஜி கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பாஜக அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஒசூர் விமான நிலையம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செங்கல்பட்டு மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள பிரதமர் மோடி, ஊழல் திமுக அரசுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.