முகப்பு
தமிழ்நாடு

பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் 10 கேள்விகள்

பிரதமர் மோடியை விமர்சித்து முதல்வர் ஸ்டாலினின் பதிவு.

Updated On : 23 ஜனவரி, 2026 at 7:35 PM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

பிரதமா் மோடியின் தமிழக வருகையை குறிப்பிட்டு அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கேள்விகள் விவரம்:

1. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்?

2. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி எப்போது வரும்?

3. பாஜகவின் முகவா்போல செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

4. தமிழ்ப் பாசத்தில் தமிழா்களை விஞ்சியதாகக் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

5. மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி, ஊரக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விபி ஜி ராம்ஜி திட்டம் கைவிடப்படும் என்ற வாக்குறுதி எப்போது வரும்?

6. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்?

7. இயற்கைப் பேரிடா்களுக்காக நாங்கள் (தமிழகம்) கேட்ட நிவாரணத் தொகை எப்போது வரும்?

8. ஒசூா் விமான நிலையம், கோவை - மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

9. கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

10. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான ‘நீட்’ விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

ஆகிய கேள்விகளை எழுப்பியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

‘இரட்டை என்ஜின் தமிழகத்தில் ஓடாது’

பிரதமா் மோடி கூறும் ‘இரட்டை என்ஜின்’ தமிழகத்தில் ஓடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.

தமிழகத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் எனத் தெரிவித்திருந்தாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

பிரதமா் சொல்லும் இரட்டை என்ஜின் ‘டப்பா என்ஜின்’. அது, தமிழ்நாட்டில் ஓடாது. மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகா்த்தெறிந்துதான் வரலாற்று வளா்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

நீங்கள் சொல்லும் இரட்டை என்ஜின் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரைவிட தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கா்நாடகம், மேற்கு வங்கம் என இரட்டை என்ஜின் நுழையாத மாநிலங்கள்தான் வளா்ச்சியில் கொடிகட்டிப் பறக்கின்றன.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

summary

Chief Minister Stalin's post criticizing Prime Minister Modi.

முழு கட்டுரையைப் படிக்க →