2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை தரவுகளிலிருந்து அறிய முடிகிறது.
இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில், 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 13 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, தமிழகத்தைப் பொருத்தவரையில் கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எஸ் கே எம் மயிலானந்தன், கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வீழிநாதன் காமகோடி
திருவாரூர் பக்தவத்சலம்
சிவசங்கரி
ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர்
ஆர் கிருஷ்ணன்
டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன்
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்
கே விஜய் குமார்
கே ராமசாமி
எச் வி ஹாண்டே
காயத்ரி பாலசுப்ரமணியன் - ரஞ்சனி பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற தென்மாநிலங்களான கர்நாடகத்திலிருந்து 8 பேருக்கும், தெலங்கானாவிலிருந்து 7 பேருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, கேரளத்திலிருந்து 5 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கேரளத்திலிருந்து 8 சாதனையாளர்கள் இந்தாண்டு பத்ம விருதுகளைப் பெற உள்ளனர்.
2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தம் 131 பேரில், 40 பேர் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள மேற்கு வங்கத்திலிருந்து 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில், மொத்தம் 19 பேர் பெண்களாவர். இந்திய வம்சாவளி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.