பெரம்பலூர் அருகே காவல் துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரெளடி அழகுராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவர் சண்முகவேல் மகன் காளிமுத்து (எ) வெள்ளக்காளி (30). பிரபல ரௌடியான இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கில் நீதிமன்ற தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட வெள்ளக்காளி, இரவு நேரமாகிவிட்டதாலும், குற்றவாளியின் பாதுகாப்பு கருதியும் திண்டுக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து திண்டுக்கல் சிறையிலிருந்த வெள்ளக்காளியை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக, சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஆயுதப்படை சார்பு-ஆய்வாளர் ராமச்சந்திரன் (54) தலைமையிலான ஆயுதம் ஏந்திய 3 போலீஸார், காவல் துறைக்குச் சொந்தமான வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகம் எதிரே போலீஸார் வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவகத்தின் உள்ளே சார்பு-ஆய்வாளா் தலைமையிலான போலீஸாருடன் வெள்ளக்காளி அமா்ந்திருந்தார். அப்போது, காவல்துறையினரின் வாகனத்தை பின்தொடர்ந்து 2 காரில் வந்த, அடையாளம் தெரியாத சுமார் 15-க்கும் மேற்பட்டோா் வெள்ளக்காளியை கொலை செய்வதற்காக, அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
இதையறிந்த சார்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன், நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
நாட்டு வெடிகுண்டு வீசியதில், தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விக்னேஷ்குமார் (37), மதுரை, வாடிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மருதபாண்டி (30) ஆகிய போலீஸார் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த போலீஸார் மற்றும் ரௌடி வெள்ளக்காளியை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்த கும்பலை தேடும் பணியில் 5 தனிப்படை போலீஸார் ஈடுபட்ட நிலையில், மர்ம கும்பல் நிறுத்திச் சென்ற காரை பறிமுதல் செய்து, சுங்கச்சாவடி மற்றும் உணவகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அழகுராஜா என்பவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
அழகு ராஜாவை கைது செய்த காவல் துறையினர், அவர் வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்றபோது, ரெளடி அழகுராஜா, உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது, மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார், அழகுராஜாவை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.