பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரௌடி அழகுராஜா, சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). ரௌடியான இவர் மீது கொலை, கொலைமுயற்சி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸார் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளக்காளியை ஆஜர்படுத்திவிட்டு, காவல்துறைக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக கடந்த 24 ஆம் தேதி அழைத்து சென்றுக்கொண்டிருந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 2 காரில் வந்த 15 பேர் கொண்ட மர்ம கும்பல் 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளக்காளியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் சுட்டதில் மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த காவலர்கள் மருதுபாண்டி, வினேஷ்குமார், மற்றொரு காரில் வந்து உணவகத்திலிருந்த ரௌடி வெள்ளக்காளி வழக்குரைஞர் அரியலூர் வாலாஜா நகரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சுங்கச்சாவடி மற்றும் உணவகங்களில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளைக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
என்கவுன்டர் நடந்தது எப்படி?
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் கொட்டுராஜா எனும் அழகுராஜா (30) உள்ளிட்ட 3 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள வனப்பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புதுக்கிவைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை மங்களமேடு காவல்நிலைய ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் அழகுராஜாவுடன் அப்பகுதிக்குச் சென்றபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து காவல்துறைக்குச் சொந்தமான வாகனத்தின் மீது வீசி, குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு அழகுராஜா தப்ப முயன்றார்.
இதையடுத்து, ஆய்வாளர் நந்தகுமார் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா பலத்த காயமடைந்தார். பின்னர், காயமடைந்த சார்பு ஆய்வாளர் சங்கர், ரௌடி அழகுராஜா ஆகியோரை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே ரௌடி அழகுராஜா பலியானார்.
தகவலறிந்த திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சார்பு ஆய்வாளர் சங்கரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தச் சம்பவம் குறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸாரால் சுட்டுக்கொலை செயய்ப்பட்ட ரௌடி அழகுராஜா மீது 3 கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.