வாஷிங்டன் : டிரம்ப் நிர்வாகம் ராணுவத்தின் மீது அதிகம் சார்ந்திருப்பதாக கடும் விமர்சனம் சுமத்தப்பட்டுள்ளது. ஈரான், உக்ரைன் பிரச்னைகளில் சமரசம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் ராணுவ தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சனப் பார்வை எழுந்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதல்போக்கு அண்மைக்காலத்தில் தீவிரமடைந்து, இரு நாடுகளுக்குமிடையே போர் மூளுமோ? என்ற சூழலுக்கு அச்சாரமிட்டுள்ளது. பதற்றமான சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(பிப். 6) ஓமனில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் டிரம்ப் தரப்பு முக்கிய பிரதிநிதியாக அமெரிக்க மத்திய கமாண்ட்டின் தலைவரான பிராட் கூப்பர் அனுப்பப்பட்டிருந்தார். ஈரான் இணங்கி வராவிட்டால் அமெரிக்கா ராணுவ பலத்தை பயன்படுத்தக்கூடும் என்றதொரு சமிக்ஞையை உலகுக்கு எடுத்துக்காட்டவே, ஈரானுடனான பேச்சுவர்த்தைக்கு ராணுவ உயரதிகாரியை டிரம்ப் அனுப்பியிருப்பதாகச் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெளிவாக்குகின்றனர்.
அதேபோல, ராணுவச் செயலரான டேன் ட்ரிஸ்கோல், ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தத்துக்கான அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கமாக அனுப்பப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், ராணுவம் மீது அதிக சார்பு நிலையில் டிரம்ப் நிர்வாகம் உள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபில்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் நிர்வாகத்தில் தேசப் பாதுகாப்பு உயர் பதவிகள் வகித்த எலிசா எவெர்ஸ் குறிப்பிடும்போது, ‘ராணுவத்தில் உயர் பதவி வகித்து இன்னும் சேவையாற்றி வரும் கூப்பர் போன்ற ராணுவ தலைவர்களை தூதரக ரீதியிலான பணிகளுக்குப் பிரதிநிதிகளாக அமர்த்துவதென்பது, திறன்மிக்க தூதர்களின் திறமையை டிரம்ப் நிர்வாகம் குறைத்து மதிப்பிடுவதைக் காட்டுவதுடன், தூதரக ரீதியிலான உறவிலும் வெளியுறவுக் கொள்கைச் சவால்களையும் எதிர்கொள்ள ராணுவத்தை அளவுக்கதிகமாகச் சார்ந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது’ என்று சுட்டிகாட்டி கடும் விமர்சனங்களைச் சுமத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், பிராட் கூப்பரை எதற்காக டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தார் என்பதைப் பற்றி வெள்ளை மாளிகையிலிருந்து இதுவரையில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.