திமுக எம்எல்ஏவும் ராஜிநாமா? திருவாரூரில் மு.க. ஸ்டாலின் போட்டியா?
திருவாரூரில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து...
திருச்சி கிழக்கில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திருவாரூரில் போட்டியிடவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்திருந்தார்.
இதையடுத்து, கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனையடுத்து, கரூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் திங்கள்கிழமை கடிதம் அளித்தார்.
இதையடுத்து, கரூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 7 தொகுதிகள் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ளன.
பொதுவாக ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், வரும் நவம்பருக்குள் இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
திருவாரூரில் மு.க. ஸ்டாலின் போட்டியா?
இந்தச் சூழலில் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வரும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக ராஜிநாமா செய்த தொகுதிகளில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு சதவீதம் குறைவாக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் என்றும், திமுகவின் பலம்வாய்ந்த தொகுதியான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்விகமான திருவாரூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடலாமா என்றும் ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. பூண்டி கே. கலைவாணன் தனது பதவியை ராஜிநாமா செய்யவிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள அரசியல் சூழலில் மு.க. ஸ்டாலினை எப்படியாவது பேரவைக்கு எம்எல்ஏவாக வர வைக்க வேண்டும் என்ற முழு முயற்சியில் திமுக இருக்கிறது என்றும், அது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
While it was previously said that former Chief Minister M.K. Stalin would contest from Trichy East, information has now emerged that he will contest from Tiruvarur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.