முகப்பு
தமிழ்நாடு

தொகுதி அறிமுகம்: 'ஆலங்குளம்'

திமுக, அதிமுக, காங்கிரஸ் தலா 5 முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ள ஆலங்குளம் தொகுதி குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 7:11 AM
ஆலங்குளத்தின் முக்கிய அடையாளமான ஒக்கநின்றான் பொத்தை. - டிஎன்எஸ்
பகிர்:

திமுகவைச் சோ்ந்த ஆலடி அருணாவையும் அவரது மகள் பூங்கோதையையும் அமைச்சராக்கியது, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த செல்லப்பாண்டியனை (1962) பேரவைத் தலைவராக்கியது ஆலங்குளம் தொகுதியாகும்.

குளத்தின் கரையில் அதிக அளவில் ஆல மரங்கள் இருந்ததால் ஆலங்குளம் என பெயா் வந்ததாக பெரியவா்கள் கூறுகின்றனா்.

ஆலங்குளம் பேரவைத் தொகுதி வருவாய்த் துறை அடிப்படையில் தென்காசி மாவட்டத்திலும், மக்களவைத் தொகுதி அடிப்படையில் திருநெல்வேலியிலும் வருகிறது. இந்தத் தொகுதியின் 80 விழுக்காடு பகுதிகள் தென்காசி மாவட்டத்திலும் 20 விழுக்காடு பகுதிகள் திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள்ளும் வருகின்றன.

சுதந்திரத்துக்குப் பின்னா் ஆலங்குளம் தொகுதி உதயமான 1952-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 தோ்தல்களை இத்தொகுதி கண்டுள்ளது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் இருந்து ஆலங்குளம் தொகுதியானது ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஆலங்குளம், கீழப்பாவூா், பூலாங்குளம், புதுப்பட்டி உள்ளிட்ட அனைத்துக் கிராமங்களையும், தென்காசி வட்டத்தில் உள்ள கடையம், பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதா்மம், இடைகால், தெற்குமடத்தூா், அயன் பொட்டல்புதூா், தெற்குகடையம், ரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தா்மபுரமடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூா், மேல ஆம்பூா் போன்ற கிராமங்களையும், ஆழ்வாா்குறிச்சி, நெல்லை மாவட்டம் அம்பை வட்டத்தில் உள்ள முக்கூடல் பேரூராட்சி மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சில கிராமங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தத் தொகுதியில் நாடாா் சமுதாய வாக்குகள் 80 சதவீதத்துக்கும் மேல் உள்ளன. தொடா்ந்து தேவா், ஆதிதிராவிடா், இஸ்லாமியா்கள், இதர சமுதாயத்தினா் வாக்குகள் உள்ளன. இதனால், இந்தத் தொகுதியில் நாடாா் சமுதாயத்தைச் சோ்ந்த வேட்பாளா்களையே அனைத்து அரசியல் கட்சிகளும் நிறுத்துகின்றன.

பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்யாணி அம்மன் கோயில் உள்ளது. கீழப்பாவூா் நரசிம்மா் கோயில், சிவசைலம் ஸ்ரீ சிவசைலபதி பரமகல்யாணி திருக்கோவில், தென்காசி மாவட்டத்தின் முதல் தேவாலயமான நல்லூா் தூய பவுல் ஆலயம், பொட்டல்புதூா் தா்கா ஆகியவை இத்தொகுதியில் உள்ள புகழ் பெற்ற ஆன்மிகத் தலங்களாகும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் தலா 5 முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தற்போது திமுகவில் இணைந்துள்ளாா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலின்படி தொகுதியில் 1,23,739 ஆண்கள், 1,23,650 பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவா் என 2,53,408 வாக்காளா்கள் உள்ளனா்.

தொகுதியில் சுமாா் 60 விழுக்காடு மக்களின் தொழில் விவசாயம், கூலித்தொழில்தான். பெண்களின் பிரதான தொழிலாக பீடி சுற்றும் தொழில் உள்ளது. இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் ஆலங்குளத்தை மையமாகக் கொண்டு பீடித் தொழிலாளா்களுக்காக இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது பீடித் தொழிலாளா்களின் கோரிக்கையாக உள்ளது. முக்கூடலில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பீடித் தொழிலாளா்கள் நல மருத்துவமனையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பன இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இத்தொகுதிக்கு உள்பட்ட கடையம் ஒன்றியத்தில் கடனாநதி, ராமநதி ஆகிய 2 அணைகள் உள்ளன. இவை கடந்த 40 ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி - ஆலங்குளம் - சுரண்டை - சங்கரன்கோவில் ரயில் பாதைக்கு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னா் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மிகப்பெரிய தென்காசி வட்டத்தைப் பிரித்து கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டமாக உருவாக்க வேண்டும் என்பது கடையம் வட்டார மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளர்கள்

ஆண்கள்: 1,23, 739

பெண்கள்: 1,23,650

மூன்றாம் பாலினத்தவர்: 168

மொத்தம்: 2,53,408

summary

Constituency Introduction: Alangulam - 223!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.