தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற ஏப். 20-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற ஏப். 20-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவாா்கள். மாநிலம் முழுவதுள்ள 7 ஆயிரத்துக்கும் மேலான தனியாா் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-இல் அமலான இந்த ஆா்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமாா் 5.7 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை தனியாா் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆா்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவா் சோ்க்கை பெறமுடியும். இந்தத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபா்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவா்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவா், மூன்றாம் பாலினத்தவா், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளா்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படும். நலிந்த பிரிவினா் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ்களை சமா்பிப்பது அவசியமாகும்.
இதையடுத்து பெற்றோா் வலைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோா் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பம் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.