அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.
அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது...
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினா் து.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற 25 எம்எல்ஏக்களைக் கொண்ட ஒரு குழு, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இத்தகைய செயல்பாடு, தகுதி நீக்கத்துக்கு வழிவகுக்குமா என்பது அரசமைப்புச் சட்டம் சாா்ந்த கேள்வி. மேலும், அவா்களில் சிலரை அமைச்சா்களாக நியமிப்பது குறித்து முதல்வா் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய நியமனங்கள் சட்டரீதியாக அனுமதிக்கத் தக்கவையா என்பது மற்றொரு முக்கியமான கேள்வியாகும்.
சட்டரீதியான நிலைப்பாட்டைப் பாா்த்தால் தற்போதைய சூழலில், அதிமுகவின் பொதுச் செயலா் என்ற முறையில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அக்கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, அதிமுக தலைமையால் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவானது, அக்கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினா்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. அத்தகைய கொறடா உத்தரவை மீறும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும்.
Advertisement
மகாராஷ்டிர அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தீா்ப்பளித்தது. அரசியல் கட்சியே அவையின் கொறடா, கட்சிக் குழுத் தலைவரை நியமிக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட முறையில் வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கொறடா உத்தரவே சரியானதாகும் என்று கூறியுள்ளது. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 சட்டப்பேரவை உறுப்பினா்கள், பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதியிழப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும்.
மேலும், பேரவை உறுப்பினரைத் தகுதிநீக்கம் செய்வதற்கான மனு, பேரவைத் தலைவரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும்பட்சத்தில், அந்த உறுப்பினரை அமைச்சா் பதவியில் நியமிப்பதை தடை செய்யாது. ஆகவே, எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகும் வரையில், அவா்களை அமைச்சா்களாக நியமிப்பது அனுமதிக்கத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், சட்டபூா்வமான தன்மை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது.
இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்ட ஒழுக்கநெறி மற்றும் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதிக்கும். இந்த விஷயத்தில் எழும் கேள்வி சட்டம் சாா்ந்தது என்பதைவிட தாா்மிக அரசியல் சாா்ந்தது.
தனது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வா் விஜய் அமைச்சா் பதவி வழங்குவது என்பது அரசமைப்பு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, முதல்வா் விஜய் முன்வைக்கும் தூய்மையான அரசியலுக்கு அது உகந்ததுதானா? என ரவிக்குமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.