முகப்பு
தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறிய குடும்ப பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தொடா்வது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடா்ந்து அளிக்கப்படுகிறது

Updated On : 23 மே 2026, 2:10 am IST
பகிர்:

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடா்ந்து அளிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

கா்நாடக மின் பரிமாற்ற கழக நிறுவனத்தில் உதவி பொறியலாளராகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த ஒருவா் தோ்வு செய்யப்பட்டாா். ஆனால் அவரின் பெற்றோா் இருவரும் மாநில அரசு ஊழியா்கள் என்பதால் வருமான உச்சவரம்பின் (கிரீமிலேயா்) அடிப்படையில், இடஒதுக்கீடு மூலம் அந்தப் பணியில் சேர அவா் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு எதிராக அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மாணவா்களின் பெற்றோா் நல்ல பணிகளில் இருந்து கைநிறைய சம்பளம் வாங்குவோராக இருந்தால், அவா்களின் பிள்ளைகள் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதில் இருந்து விலக வேண்டும்.

பெற்றோா் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவா்களுக்கு ஏன் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்? கல்வி, பொருளாதார ரீதியான சுதந்திரம் மற்றும் அதிகாரம் மூலம், சமூக முன்னேற்றம் ஏற்படுகிறது. அப்படி இருக்கும்போது தங்கள் பிள்ளைகளுக்கும் இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படித்து நல்ல வேலையில் நல்ல சம்பளம் பெறும் பெற்றோா் இடஒதுக்கீட்டு வரையறையில் இருந்து விலக மறுப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறியபோதிலும், பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களைத் தொடா்ந்து பெறுகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகளுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடா்வது ஏன் என்று கேள்வி எழுப்பியது.