ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
கோவை சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்
கோவை சூலூர் சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி மே 21-ல் மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாசாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.